தமிழ் | తెలుగు

» ஆன்மீகச் சுற்றுபயணம் » அகில இந்திய சுற்றுப் பயணம்

அகில இந்திய சுற்றுப் பயணம்

சென்ற இதழில் தொடர்ந்து நடைபெற்ற பயணத்தின் சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டோம். இது தொடர்ந்து வர காரணம் என்னவென்றால் உலகெங்கிலும் இல்லாத அளவுக்கு இறை பக்தியானது இந்தியாவில்தான் அதிகமாக இருப்பதைப் பார்க்கலாம். இருந்தபோதிலும் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், மற்ற மதத்தினரும் இறை பக்தியை உடையவர்களாக இருந்த போதிலும் அந்த ஒரே இறைவன் யார் என்று தெரியாமலேயே வணங்கி வருகின்றனர். அது போன்று நம் நாட்டினருக்கு அனைத்து வேதங்களின் வாயிலாக சொல்லப்படும் ஒரே இறைவன் யார்? என்ற இறை ஞானத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், அனைத்து வேதங்களையும் நம் நாட்டினர் வாசித்து அந்த ஒரே இறைவனின் கீழ் ஒன்றுபடுவார்கள் என்ற உயரிய நோக்கத்துடன் இந்த பயணக் கட்டுரையும், பயணமும் ஆகும். தொடர்ந்து பயண நிகழ்வுகளை பார்க்கலாம்.

சீக்கீமை (கேங்டாக்) தொடர்ந்து நாங்கள் பீகார் மாநிலத்தை நோக்கி எங்களுடைய காரில் பயணமானோம். அதிக மலைப் பகுதிகளிலும் அதிக குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவிய அந்த பகுதிகளைக் கடந்து ஒரு நிலப்பரப்பான பகுதிக்கு வந்ததும் கடினமான பாதைகளைக் கடந்து வந்துவிட்டோம் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. இவ்விதமாக பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னா வந்து சேர்ந்தோம். அதே நேரத்தில் ஆந்திராவில் இருந்து மற்றொரு காரில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலர் வந்து எங்களுடன் இணைந்து கொண்டனர். பாட்னாவைச் சேர்ந்த சுற்றுப்பகுதிகளிலும் கைப்பிரதிகள், புத்தகங்கள் அனைத்தையும் விநியோகித்துக்கொண்டு அநேக பிரமுகர்களுடன் இந்த ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையையும், கல்கி மகா அவதாரத்தின் வருகையின் முக்கியத்துவத்தைக் குறித்தும் எடுத்துரைத்தோம்.

அதற்கடுத்ததாக உத்திரபிரதேசத்தை நோக்கி வாரணாசி, காசி இன்னும் சில பகுதிகளுக்கு பயணம் செய்தோம். இந்தியாவின் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படும் காசி என்ற இடத்தில் சத்தியத்தின் ஒளியாகிய மனுஜோதியின் ஒளியை தெரியப்படுத்த தமிழகத்தில் இருந்து நாங்கள் சென்றோம். அங்கே பல மாநிலத்தைச் சார்ந்த மக்களையும் காணமுடிந்தது. அவர்களிடம் கைப்பிரதிகள் மற்றும் புத்தகங்களை சி.டிக்களையும் கொடுத்துக்கொண்டு சட்டீஸ்கர் நோக்கி பயணமானோம்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் இருக்கின்ற பக்தர்களை ஒன்று திரட்டி அவர்களோடு ஒருநாள் தங்கியிருந்தோம். ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் 1986-ம் ஆண்டு ஜுன் மாதம் மனுஜோதி ஆசிரமத்திலிருந்து ஒரு குழுவோடு பத்து நாட்கள் சட்டீஸ்கரில் உள்ள பிலாய் நகரத்தில் பொதுக்கூட்டங்களை ஒழுங்குபடுத்தி வெற்றிகரமாக நடத்தினார்கள். அந்த கூட்டங்களில் பரம புருஷரின் ஆதிவேள்வியைக் குறித்து பகவத் கீதை மற்றும் பாகவதம் மற்றும் இதர வேதங்களிலுமிருந்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அந்த கூட்டங்களில் பங்கெடுத்தவர்களும், காவல் துறையினரும் ஆசி பெற்றது இன்றளவும் மறக்க முடியாத நிகழ்வாகும். கூட்டங்களை முடித்து திரும்பும் நாளில் 10 ஆண்டுகளாக மழை பெய்யாமல் வறட்சியாக இருந்த அந்த பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அது அங்குள்ள மக்களுக்கு இறைவன் கொடுத்த ஒரு அடையாளமாகவும் இருந்தது. இன்று வரை அந்த பகுதியிலுள்ள பக்தர்கள் மனுஜோதி ஆசிரமத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

சட்டீஸ்கரில் இருந்து புறப்பட்ட நாங்கள் ஒரிசா மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர் வழியாக சுமார் இரண்டு நாட்கள் இடைவிடாமல் பிரயாணம் செய்து ஆந்திராவில் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதியான சிந்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அசரடா என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அச்சமயத்தில் அசரடாவில் இருந்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் தியான நிலையத்தில் அவருடைய பக்தர்களின் குழந்தைகள் பங்குபெற்ற மாணவ மாணவியர் கோடை விடுமுறை முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயமாகும். அந்த மாணவ மாணவியர்களைப் பார்த்தவுடன் எங்கள் 40 நாட்கள் பிரயாணத்தின் களைப்பையே நாங்கள் மறந்து விட்டோம். நாங்களும் முகாமில் பங்குபெற்ற மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, இறுதி நாளில் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு, எங்கள் அகில இந்திய ஆன்மீக சுற்றுப்பிரயாணத்தை வெற்றிகரமாக முடிக்க பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தோம். அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று எங்கள் பயணத்தை தமிழகத்தை நோக்கி தொடர்ந்தோம்.

இவ்விதமாக ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நல்லாசியுடனும் முதல் சுற்றுப்பயணத்தை முடித்து, பூலோக வைகுண்டமாகிய மனுஜோதி ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தோம். எங்கள் வருகையை ஆவலோடு எதிர்நோக்கியிருந்த ஆசிரம குடும்பத்தினர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டோம்.

இந்த அகில இந்திய சுற்றுப்பயணத்திலே நாங்கள் இறைவனின் அருளையும், பாதுகாவலையும், எங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. மேலும் நமது இனத்தவரோ அல்லது பாஷையோ தெரியாத மாநிலங்களில் சுற்றி வந்திருப்பது இன்றைய நாட்களில் ஒரு சாதாரண காரியமல்ல. எங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள்கூட பல வருடங்கள் எங்களோடு பழகியவர்கள்போல நடந்துகொண்டு உதவியதும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை எந்த மாநிலத்தவர்களுக்கும் தெரியாத ஒரு புதிரான விஷயமாக இருந்தது. அனைவரும் இந்த கொள்கையை முழு மனதோடு ஏற்றுக்கொண்டனர். ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள், தான் கொடுத்த இந்த செய்தியானது ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடின்றி அனைவருக்கும் உரியது என்ற வாக்கு இந்த சுற்றுப்பயணத்தினால் உறுதியானது.

வடகிழக்கு சுற்றுப் பயணமானது இனிதே முடிவுபெற்றபோதும், வட மேற்கு இந்திய மாநிலங்களிலுள்ள மக்களை எப்பொழுது சந்திப்போம் என்ற ஆவல் மேலோங்கியது. அதன் காரணமாகவே இரண்டாவது அகில இந்திய ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் பிரார்த்தித்தோம். அவருடைய திட்டப்படியே இரண்டாவது பயணத்தையும் மேற்கொண்டு முடித்தோம். அப்பயணத்தின் நிகழ்வுகளை அடுத்த இதழில் பார்க்கலாம்.

பரம்பொருள் வாழும் பூமியிது! நல் ஆத்மாக்கள் தேடும் காலமிது!

– தொடரும்…..

D. பத்மநாபன் – இறைத்தொண்டர், நெல்லூர்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்