தமிழ் | తెలుగు

» ஆன்மீகச் சுற்றுபயணம் » அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம்

அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம்

அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம்
ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனையை இந்த உலகிற்கு தெரியப்படுத்துவதற்காக மனுஜோதி ஆசிரமத்தில் ஒரு குழுவாக இந்தியா முழுவதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பறைசாற்றுவதற்கு, காரில் இந்தச் ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டோம். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பிரயாணம் செய்த அனுபவத்தை பயணக் கட்டுரையாக தொடர்ந்து வரும் இதழ்களில் வாசகர்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவில்தான் எத்தனை சிறப்புகள்! எத்தனை மதங்கள், எத்தனை மொழிகள், எத்தனை கலாச்சாரங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், புண்ணியத்தலங்கள், மலைகள், நதிகள் இன்னும் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை முறைகள். இவை அனைத்தையும் கடந்து, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பாதுகாப்பை, பயணம் செய்த அனைவருமே உணர்ந்தோம். இந்த அனுபவங்களின் மூலம் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையை வாசகர்களாகிய நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். இந்த பயணத்தின்போது அனைத்து மதத்தினரும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை ஏற்றுக்கொண்டு இலவச புத்தகங்களையும் பெற்றுக்கொண்டனர்.
முதலாவதாக இந்திய வரைபடத்திலுள்ள வடகிழக்கு மாநிலங்களை நோக்கி நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். இந்த வருடம் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை ஏறக்குறைய 40 நாட்கள் பல்வேறு மாகாணங்களில் ஸ்ரீமந் நாராயணரின் அரசாட்சி நடைபெறுகிறது என்று மக்களுக்கு அறிவித்தோம். ஆந்திர மாநிலத்தில் தொடங்கி, ஒரிசா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், பீகார், சிக்கீம் (Gangtok), நாகாலாந்து, மேகாலயா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், சட்டீஸ்கர் மார்க்கமாக தமிழ் நாடு வந்தடைந்தோம். இரண்டாவது சுற்றுப்பயணமாக வடமேற்கு மாநிலங்களை நோக்கி எங்கள் சுற்றுப் பயணத்தைத் தொடங்கினோம். இந்த அகில இந்திய சுற்றுப் பயணமானது இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி ஆரம்பமானது. செப்டம்பர் மாதம் 26-ம் தேதி நிறைவுபெற்றது. இதில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் அநேகர் பங்கேற்றனர்.
மனுஜோதி ஆசிரமத்திலிருந்து இந்திய வரைபடத்திலுள்ள வடமேற்கு மாநிலங்களை நோக்கி பயணமானோம். அதாவது கேரளா மாநிலம் மாஹி, கொச்சி, எர்ணாகுளம், கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, புதுடெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்திராகாண்ட், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா வழியாக தமிழ்நாடு வந்தடைந்தோம். அகில இந்திய சுற்றுப்பயணத்தின் அனுபவங்களை நீங்கள் தெரிந்துகொள்வதற்கு முன்பாக இந்த பயணத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு, நாம் சில அடிப்படை ஆன்மீக கருத்துகளைப்பற்றி தெரிந்துகொள்வோம்.
பரிசுத்த வேதாகமத்தில், எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 4-ம் அதிகாரம் 6-ம் வசனத்தில், “சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள்; நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா சங்காரத்தையும் வரப்பண்ணுகிறேன்.” என்ற தீர்க்கதரிசனத்திற்கேற்ப, நாங்கள் வடக்கு நோக்கி சென்றிருக்கும்போது உத்திராகாண்டில் நிலநடுக்கத்திலே அநேக உயிர்சேதங்களும், பொருட்சேதங்களும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இறைவன் தீர்க்கதரிசிகள் மூலம் கூறியுள்ளபடி இந்த கலியுகத்திலே நடைபெறுகிறது என்று சென்ற இதழில் நம்பினால் நம்புங்கள் என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியை படித்திருப்பீர்கள்.
இன்றைய நவநாகரீக உலகம்:- இன்று உலகத்தில் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் உள்ளோம். விஞ்ஞானத்தின் உயர்ந்த நிலையை 1969-ம் ஆண்டு ஜூலை 21-ம் நாள் அமெரிக்க நாட்டினர் முதன் முதலாக மனிதனை சந்திரனுக்கு அனுப்பி அங்கே மனிதனை கால் பதிக்கும்படி செய்தார்கள். இன்று சேட்லைட்டின் உதவியுடன் கைபேசி, இணையதளம், வாட்ஸ் அப், முகநூல் போன்றவற்றின் மூலமாக இளைய தலைமுறையினர் அமர்ந்த இடங்களில் இருந்த வண்ணமே எல்லா காரியங்களையும் இலகுவாக செய்து முடிக்க வல்லுநர்களாக விளங்குகின்றனர். விஞ்ஞானத்தின் மூலமாக அநேக காரியங்களை செய்தாலும் மெய் ஞானத்தை (இறைவனின் ஞானம்) கற்றுக்கொள்ள முடியுமா, முடியாதா? என்பதை நாம் சிந்தித்து உணர வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இன்று உலக நாடுகள் அனைத்தும் வல்லரசு நாடுகளாக விளங்க வேண்டும் என்பதற்காக ஆயுதங்கள், ஏவுகணைகள் போன்ற அழிக்கும் வல்லமை படைத்த ஆயுதங்களை தயார் செய்து வருகின்றனர். உதாரணமாக இரண்டாம் உலகப்போரில் அணு ஆயுதங்களால் அழிக்கப்பட்ட ஹிரோஷீமா, நாகசாக்கி என்ற ஜப்பான் நாட்டின் பகுதிகள் நாம் அறிந்ததே. சமீப காலத்திலும் ஈராக் நாடும் அமெரிக்காவினால் முழுவதுமாக அழிக்கப்பட்டதும் தெரிந்ததே. இதுபோன்ற அழிவுகள் மட்டுமல்லாது, இயற்கை சீற்றங்களான புயல், சுனாமி மற்றும் பூகம்பம் போன்றவற்றால் உலகெங்கிலும் அழிவு ஏற்பட்டு வருகிறது என்பது நாம் அறிந்ததே. இதுபோன்ற அழிவுகளிலிருந்து மனித சமுதாயத்தை காப்பாற்ற வல்லமை எந்த ஒரு தனி மனிதனுக்கும் கிடையாது. அழிவுகள் ஏற்பட்ட பிறகு அனுதாபங்களைச் சொல்பவர்களே அதிகம். ஆனால் எந்த ஒரு ஆழிவும் நம்மை நெருங்குவதற்கு முன்பாகவே நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மெய் ஞானம் என்ற இறைஞானம் ஒன்றே மனித சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதை நாம் இலகுவாக அறிந்துகொள்ளலாம்.
மெய் ஞானம் (இறைஞானம்): மெய் ஞானம் என்று சொல்லும்போது, அது மனிதனின் அறிவின் மூலமாக மற்றொரு மனிதனுக்கு போதிப்பதல்ல. அண்டசராசரத்திலுள்ள அனைத்து படைப்பினங்களையும் படைத்த இறைவன், மனித வர்க்கத்தின் ஆன்மீக வளர்ச்சிக்காக தானே மனிதனாக அவதரித்து, மக்களுக்கு போதிப்பதாகும். இவ்விதமாக வந்தவைதான் வேதங்கள், பகவத்கீதை, பாகவதம், இதிகாச புராணங்கள், உபநிடதங்கள், தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்கள் போன்றவைகளாகும். இவைகள் நூல் வடிவிலே நம் மத்தியில் உள்ளன.
“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்று திருவள்ளுவரும், தான் எழுதிய திருக்குறளில் அழகாக கூறியுள்ளார். நம்முடைய இந்திய நாட்டிலே பொதுவாக தென்னிந்திய பகுதிகளை நாம் பார்க்கும்போது, நம் முன்னோர்கள் தெய்வ பயத்தையும், பக்தியையும், ஆன்மீக வாழ்வினையும் மறக்கக்கூடாது என்பதற்காக புண்ணிய க்ஷேத்திரங்கள் (கோவில்கள்) பல வடிவமைத்து நாம் இறைவனை தேடுவதற்காக வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமிழகத்தில் உலகப்பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் என்ற நூலை எழுதிய திருவள்ளுவர், இறைவனை அருட்பெருஞ்ஜோதியாக கண்டறிந்த இராமலிங்க அடிகளார் மற்றும் தாயுமானவர் என்று அழகாக சித்தரிக்கும் நாயன்மார்களும் தமிழகத்தில் தோன்றியுள்ளனர்.
கடைசியாக 200 வருடங்களுக்கு முன்பாக சாமிதோப்பு பகுதியில் பிறந்து வைகுண்டரை (நாராயணரை) எவ்விதமாக கண்டுகொள்ள முடியும் என்றும், அவரின் மூலமாக நாம் பெறப்போகும் நன்மைகளையும் அருள்நூல், அகிலத்திரட்டு போன்ற புஸ்தகங்களின் (ஓலைச் சுவடிகளின்) மூலம் நமக்குத் தந்தவர்தான் முத்துக்குட்டி சுவாமி. நாராயணர் தாமே ஒரு குடையின்கீழ் ஆட்சி செய்வார் எனவும் முன்னுரைத்துள்ளார். அவருடைய நூல்களில் கூறியுள்ளபடிதான் அந்த வைகுண்டரே ஸ்ரீ லஹரி கிருஷ்ணா என்ற பெயரில் மனிதனாக அவதரித்து, உலக மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காகவே அவரால் நிறுவப்பட்டதுதான் மனுஜோதி ஆசிரமம் என்ற சத்திய நகரமாகும்.
இந்த மனுஜோதி ஆசிரமமானது 1963-ம் வருடம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவினால் ஏற்படுத்தப்பட்டது. உலகமெங்கிலும் வேத சான்றுகளோடு “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற உயரிய கொள்கையை உலகமெங்கும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா எடுத்துரைத்தார். அவர் நிறுவிய ஆசிரமமானது இறைவன் ஒருவர் என்றும், நாம் அனைவரும் அவரின் பிள்ளைகள்; எனவே நமக்குள் எந்த பேதமும் இருக்கக் கூடாது என எல்லா மதத்தினரும் போற்றும் வகையில் இன்றளவும் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றது. தற்சமயம் இந்த கொள்கையை உலக மக்களுக்கு மனுஜோதி இதழ் மற்றும் நம்பினால் நம்புங்கள் என்ற கைப்பிரதிகள் மூலமாகவும், புஸ்தகங்கள், வீடியோ, ஆடியோ சி.டிக்கள் மூலமாகவும், இணையதளங்களின் மூலமாகவும் பல மொழிகளில் பரப்புவதை தன் வாழ்நாளின் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் இரண்டாவது மகனான திரு. தேவாசீர் லாறி அவர்கள் இறை தொண்டாற்றி வந்தார். மேலும் அகில இந்திய வானொலி மூலமாகவும், பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாகவும் மக்களை சந்தித்து ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஆன்மீக கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.
அதன் தொடர்ச்சியாக திரு. தேவாசீர் லாறி அவர்களின் இரண்டு புதல்வர்களான திரு. D. பால் உப்பாஸ் N. லாறி, திரு. D. லியோ பால் C. லாறி அவர்களும் இந்த “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கொள்கையை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றனர். இந்த பயணத்தின்போது கிட்டத்தட்ட 40 நாட்கள் பல்வேறு மொழிகளிலும் ஸ்ரீமந் நாராயணரின் நற்செய்தியானது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு திருத்தலங்களுக்கும், கோவில்களுக்கும், தேவாலயங்களுக்கும் புத்தகங்கள் மற்றும் சீடிக்களை தபால் மூலம் அனுப்பி வைத்தோம்.
இந்த சுற்றுப் பயணத்தின்போது, நம்முடைய அண்டை நாடுகளின் எல்லைப் பகுதி வரை சென்று வந்தோம். வடகிழக்கு மாகாணங்கள் – இந்திய சீன எல்லைப் பகுதியான சிக்கீம் (Gangtok), நேபாளத்தின் எல்லைப் பகுதியான சில்லிக்குரி (Silliguri) இந்தியா மற்றும் பர்மாவின் எல்லைப் பகுதியான தின்சுக்கியா (Tinsukia), வங்காளத்தின் எல்லைப் பகுதியான சிரப்பூஞ்சி, பூடான் எல்லைப் பகுதியான காசிரங்கா போன்ற இடங்களுக்கும் சென்று வந்தோம். இந்த இடங்களில் நாங்கள் பெற்ற அனுபவங்களைப் பற்றியும், ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறை, மேலும் தீவிரவாதிகள் மத்தியில் அவர்கள் வாழ்ந்து வந்தாலும் தங்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் எவ்வாறு வாழ்ந்து வருகிறார்கள் என்பது பற்றியும் வரும் இதழ்களில் பார்க்கலாம்.
பொது மக்களின் பாதுகாவலுக்காக நம்முடைய இந்திய ராணுவத்தினர் (ஜவான்கள்) நம்முடைய நாட்டைக் காக்கும் பணியில் ஓய்வில்லாமல் பணியாற்றி வருகின்றனர். பயணத்தின்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த அநேக ராணுவ வீரர்களை எங்களால் காண முடிந்தது. நாங்கள் காரில் செல்லும்போது எங்களுடைய காரின் எண்ணைப் பார்த்து நீங்கள் தமிழ் நாட்டிலிருந்து வருகிறீர்களா என அன்புடன் கையசைத்ததையும் எங்களால் மறக்க முடியாது. நாகாலாந்தில் வாழ்கின்ற மக்கள் பாம்பு, தவளை, நாய் போன்றவைகளை தங்களின் உணவாக உண்ணுகிறார்கள். சந்தையில் அவர்கள் இவைகளை விற்பதை பார்க்கும்பொழுது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆங்கிலத்தில் “ஒருவரின் உணவு இன்னொருவருக்கு விஷமாகிறது” என்ற பழமொழிக்கேற்ப அவர்களுக்கு அது உணவாக இருக்கிறது. ஆனால் நமக்கோ அது விஷமாக கருதப்படுகிறது. இப்படி நம் பாரத நாட்டிலேயே நம்முடைய உணவு முறைகள் வேறுபடுகிறது.
ஜம்மு காஷ்மீர் செல்லும் வழியில் “கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒன்று” என்று அறிவிப்புப் பலகை ஒன்றில் வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்க்கும்பொழுது எங்களுக்கு மிகுந்த சந்தோமூமாக இருந்தது. ஏனென்றால் இந்த பாரதமானது இப்பொழுது வரைபடத்திலுள்ள மாகாணங்களை மட்டும் குறிப்பதல்ல. பாpசுத்த வேதாகமத்திலே இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அகாஸ்வேரு என்ற ஒரே அரசன் அரசாண்டான் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்து தேசம் என்றால் அது இந்தியாவைக் குறிக்கிறது என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுகிறார். சாpத்திரக் குறிப்புகளை நாம் பார்த்தோமானால் பரந்து விரிந்த இந்தியாவை அகண்ட பாரதம் என்று அழைக்கின்றனர்.
அகண்ட பாரதம் என்றால் இப்பொழுதுள்ள பாரதம் அல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் சங்கம் அமைந்திருந்த லெமூரியா கண்டமானது தண்ணீரினால் அழிக்கப்பட்டு, இந்திய வரைபடத்திலேயே இல்லாமல் போனது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறியதுபோல் லெமூரியா கண்டமானது மீண்டும் தண்ணீரில் இருந்து மேலே எழும்பும். இந்திய வரைபடமானது அநேக நாடுகளைக் கொண்டதாகத் திகழும். மேலும் அவர் கூறியதுபோல பாரத தேசமானது உலகமெங்கிலும் அரசாட்சி செய்யக்கூடிய வல்லரசு நாடாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
ஸ்ரீமந் நாராயணருடைய தெய்வீக அரசாட்சியானது இந்த பூமியில் நடைபெறுகிறது; இந்த கொள்கையின்கீழ் வருபவர்களுக்கு மட்டுமே சுபீட்சமுண்டு. எந்த ஒரு மத குருவாலோ அல்லது அரசியல் தலைவர்களாலோ இந்த ஒற்றுமையைக் கொண்டு வர முடியாது. இந்தியர்களாகிய நாம் அகிலங்களைப் படைத்த ஒரே நாயகனான ஸ்ரீமந் நாராயணரிடம் ஒன்றுபடுவோம்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை இந்தியா மட்டுமல்ல!
உலகமெங்கும் பறைசாற்றுவோம்!

– தொடரும்…..
– D. பத்மநாபன் – இறைத் தொண்டர், நெல்லூர்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்