தமிழ் | తెలుగు

» ஆன்மீகச் சுற்றுபயணம் » அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம் – 4

அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம் – 4

சென்ற இதழில் இரண்டாவது சுற்றுப்பயணத்தின் ஆரம்பத்தையும் நாங்கள் பயணித்த சில இடங்களைக் குறித்தும், எங்களைச் சந்தித்த நண்பர்களைப் பற்றியும் தெரிந்துகொண்டீர்கள். வாசகர்களாகிய நீங்கள் தொடர்ந்து தெரிந்துகொள்ள ஆவலுடன் இருப்பதை நீங்கள் எழுதிய கடிதங்கள் மூலமாக தெரிந்துகொண்டோம்.

நாங்கள் குஜராத் மாநிலத்தின் தலைநகரான அஹாமதாபாத்திலிருந்து ராஜ்கோட்டிற்கு சென்று இறைவனின் தொண்டை செய்து முடித்து மீண்டும் அஹாமதாபாத்திற்கு வரும்பொழுது பட்டேல் இனத்தைச் சேர்ந்த இலட்சக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன் விளைவாக ஊரடங்கு உத்தரவான 144 தடை உத்தரவும் அமுல்படுத்தப்பட்டிருந்தது. மேலும் எங்கள் பிரயாணத்தை தொடர முடியுமா என்று நினைக்கும் அளவிற்கு கலவரங்கள், பஸ்ஸை எரிப்பது போன்ற சம்பவங்கள் நிகழ ஆரம்பித்து விட்டது.

அச்சமயத்தில் நள்ளிரவில் புறப்பட்டு உதய்பூருக்குச் சென்று விடலாம் என்று புறப்பட்டபோது வழியில் பாதைகளெல்லாம் அடைக்கப்பட்டு, காவலர்கள் காவல் காத்துக்கொண்டிருந்தனர். என்ன செய்வது என்று நாங்கள் திகைத்தபோது, கலவரங்கள் இல்லாத பகுதிகளின் வழியாக நீங்கள் உதய்பூரை சென்றடையலாம் என அந்த காவலர்களே மற்றொரு மாற்றுப்பாதையைக் காண்பித்து எங்களை வழியனுப்பி வைத்தார்கள். வேதங்களிலும், புராணங்களிலும் இறைவனுடைய பிள்ளைகளுக்கு இடையூறுகள் வரும்போது இறைவன் அவர்களை தப்புவித்ததை நாம் படித்திருக்கின்றோம். ஆனால் அன்று நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் கண்ணாரக் கண்டோம். இதுபோன்ற அநேக சம்பவங்கள் இந்த பிரயாணத்தில் ஏற்பட்டாலும் எல்லாவற்றையும் எழுத முடியாமல் ஒன்றிரண்டு காரியங்களை மட்டுமே குறிப்பிடுகிறேன். இவ்விதமாக எந்தவித இடையூறுமின்றி ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள உதய்பூரை சென்றடைந்தோம்.

உதய்பூரில் கைப்பிரதிகளை விநியோகம் செய்து கொண்டு, தலைநகரான ஜெய்ப்பூர் சென்றடைந்தோம். “பிங்க் சிட்டி”(Pink City) என அழைக்கப்படும் ஜெய்ப்பூர் புகழ்பெற்ற அரண்மனைகள் மற்றும் பாலைவனத்தையும் கொண்ட நகரமாகும். ராஜஸ்தான் என்று சொல்லும்போது வீரமிக்க இராஜபுத்திர அரசர்கள் அரசாட்சி செய்த இடமாக திகழ்கிறது. இவை அனைத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா 1986-ம் ஆண்டு ஜெய்ப்பூருக்கு விஜயம் செய்து அங்குள்ள இந்துக்களிடம் சந்தித்து பேசி, அவர்களுக்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் ஒன்றுதிரட்டி சொற்பொழிவாற்றினார்கள். சொற்பொழிவில் இந்தியாவில் பி.ஜே.பி ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார். அவருடைய வாக்கின்படியே பி.ஜே.பி இந்தியாவில் இரண்டாவது முறை ஆட்சி அமைத்திருக்கிறது. அவருடைய வருகையால் மகிழ்ந்த அந்தப் பகுதியிலுள்ள மக்கள் அவருக்கு ராஜாவின் உடையையும், அவருடைய துணைவியாருக்கு ராணியின் உடையையும் அலங்கரித்து, ஹோலி பண்டிகையையும் அவருடன் கொண்டாடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொண்டார்கள். 29 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அடி வைத்த அந்த மண்ணில் நாங்களும் சென்று அவருக்கு மகிமை தரும் வகையில் ஹாவா மகால் மற்றும் எல்லா பகுதிகளிலும் அவரைப் பற்றி கைப்பிரதிகள், சி.டிக்கள், புத்தகங்களை விநியோகம் செய்தோம். எல்லா இடங்களிலும் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அடுத்ததாக ஜெய்ப்பூரில் இருந்து இரண்டு குழுவாக இந்திய தலைநகரான டெல்லியை அடைந்தோம். டெல்லியில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பக்தர் ஒருவர் வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்து, புது டெல்லி, பழைய டெல்லி, நிஜாமுதீன் மற்றும் உலகப் புகழ் பெற்ற ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால் பகுதிகளில் கைப்பிரதிகள், சி.டிக்கள், புத்தகங்களை விநியோகம் செய்தோம். டெல்லியில் எங்களுடைய வேலைகளை முடித்துக்கொண்டு தனித்தனி குழுவாக செல்லாமல், இரண்டு காரில் ஒன்றாக ஹரியானா மாநிலத்தின் வழியாக பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானாவுக்கு சென்றோம். அங்குள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களை சந்தித்து அவர்களுடன் ஒருநாள் தங்கியிருந்து, மறுநாள் மொகல்பூர் என்ற இடத்தில் புதிதாக ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவைப் பற்றி தெரிந்துகொண்ட நண்பர்களை சந்தித்தோம். அவர்களுக்கு இந்த கலியுகத்தின் முடிவைப் பற்றியும், அதின் விளைவுகள் என்ன என்பதையும், கலியின் பிடியிலிருந்து ஸ்ரீ லஹரி கிருஷ்ணா என்ற நாமத்தில் அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதையும் விளக்கிக் கூறினோம். அவர்களிடம் பிரியா விடை பெற்று அமிர்தசரஸ், ஜம்முவை நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

அமிர்தசரஸை நெருங்கியபோது ஜாலியன் வாலாபாக் படுகொலையும், சீக்கீயர்களின் புனித ஆலயமாகிய பொற்கோயில் இருப்பதையும் நினைவுகூர்ந்து, அவ்விடங்களைப் பார்த்துச் செல்லவேண்டும் என்று பொற்கோயிலை அடைந்தோம். அந்த ஆலயத்தின் அமைப்பைப் பார்க்கும்போது, விவிலியத்தில் யூதர்களுக்காக கடவுள் அருளிய ஆசரிப்புக்கூடாரத்தின் அமைப்பும், பொற்கோவிலின் அமைப்பும் ஒன்றாக இருப்பதைக் கண்டு வியந்தோம். அதின் அருகிலிருந்த வெள்ளையர்களை எதிர்த்து சுதந்திர தாகத்துடன் போராடியவர்களைக் கொன்று குவித்த ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தையும் கண்டோம். அதுமட்டுமல்லாமல் தாமே முன் வந்து உதவி செய்யும் பஞ்சாப் மக்களின் குணத்தைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தோம். அவ்வழியாக செல்லும்போது சிந்து நதியைக் கடந்தோம். சிந்து நதியைக் கடக்கும்போது பாரதியார் பாடிய பாடலான “சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுனே சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத் தோணிகளோட்டி விளையாடி வருவோம்என்ற பாரதியின் பாடல், அகண்ட பாரதம் ஒன்றே என்ற அவருடைய கனவை, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் நனவாக்கியதை நாங்கள் உணர்ந்து பாடி மகிழ்ந்தோம்.

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் சொற்பொழிவில் சீக்கியர்களின் மத குருவான குருநானக் என்பவரால் இயற்றப்பட்ட “சமாதானத்தின் சங்கீதம்”(Psalms of Peace) என்ற நூலையும் படிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவர் சொல்லியபடி அந்த நூலையும் அங்கிருந்து வாங்கி கொண்டு, ஜம்முவை நோக்கி புறப்பட இரவாகி விட்டது. இரவோடு இரவாக பயணத்தை தொடர்ந்த நாங்கள் நள்ளிரவில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியான லாகூருக்கு மிக அருகாமையில் செல்லும் இந்தியப் பாதை வழியாக சென்றோம். கத்தாரா என்ற இடத்தில் இந்திய சோதனைச் சாவடியை அடைந்தபோது, இந்த இரவில் எங்கே பயணம் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் எங்களுடைய பயணத்தையும், அதின் நோக்கத்தையும் அவர்களுக்கு கூறி புத்தகங்களையும், கைப்பிரதிகளையும் கொடுத்தோம். அவர்கள் இன்முகத்துடன் எங்களுக்கு வாழ்த்துதல் கூறி எங்களை வழியனுப்பி வைத்தார்கள். தொடர்ந்து இரவும் பகலும் பயணத்தை மேற்கொண்டோம்.

இவ்விதமாக ஸ்ரீ நகருக்குச் செல்லும் வழியில் வந்தனாபூர் என்ற இடத்தை அடைந்தோம். அப்பகுதியிலிருந்துதான் ஸ்ரீநகரில் பாதுகாவலில் ஈடுபட்டிருக்கும் இந்திய இராணுவ முகாம்களுக்கு தேவையான பொருட்களை கிட்டத்தட்ட 300 மிலிட்டரி ராணுவ லாரிகளில் கொண்டு செல்வார்கள். இது அனுதினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கும். நாங்களும் அந்த லாரிகளுடன் தொடர்ந்து பயணித்தோம். அது மிகவும் உயரமான மலைப்பகுதிகளைக் கடந்து செல்லக் கூடிய பாதை. ஒரு வாகனம் மறு வாகனத்தைக் கடந்து செல்வது என்பது கடினமான காரியம். ஏனென்றால் சாலையில் பாதுகாப்புக்கான தடுப்புச் சுவர்களோ பாதுகாப்புச் சுவர்களோ இருக்காது. அவ்விதமாக பயணிக்கும்போது மழை பெய்தாலும், மலையிலிருந்து சரிவுகள் ஏற்பட்டாலும் பின்னோக்கியோ முன்னோக்கியோ செல்ல முடியாத அபாயகரமான பாதையாகும். இரவில் நாங்கள் பயணித்தபோது மின்னல் மின்னியது. அதின் பலனாக ஸ்ரீ நகர் பாதையில் லேசான மழை தூறி இருந்தது. எனவே மலைப்பாதையில் புழுதி கிளம்பாமல் செல்ல வசதியாக இருந்தது. அதேவேளையில் பெரிய மழை பெய்திருந்தால் பயணம் செய்யவே முடியாது. வாகனத்திற்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால்கூட தங்குவதற்கான இடமோ மற்ற எந்த வசதிகளும் கிடையாது. எங்கள் பயணத்திற்கு இடையூறு வராதவாறு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாதாமே பாதுகாத்தார்.

இவ்விதமாக 30 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டி செல்ல முடியாத சூழ்நிலையில் இராணுவத்தினரின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற எங்களுக்கு, அந்த வாகனத்தின் ஓட்டுநர்கள் எங்களைப் பார்த்து கையசைப்பதையும், புன்முறுவல் செய்வதையும் கண்டோம். ஆரம்பத்தில் அவர்கள் ஏன் அவ்விதமாக செய்கிறார்கள் என்று எங்களுக்கு புரியவில்லை. ஒரு சூழ்நிலையில் நாங்கள் அவர்களுடைய வாகனத்தைக் கடக்க நேரும்போது அவர்கள் செய்த செய்கைகளை நாங்கள் புரிந்துகொண்டோம். ஏனென்றால் எங்கள் வாகனத்தில் தமிழகத்தின் பதிவு எண் இருப்பதை பார்த்த அவர்கள், நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து வருகிறீர்களா? நாங்களும் தமிழர்களே என்று எங்களுக்கு சைகை காண்பித்து மகிழ்ந்தார்கள். பகலில் நாங்கள் பயணம் செய்யும்போது பாக்கிஸ்தான் எல்லை ஒரு புறமாகவும், இந்தியாவின் எல்லை அதின் பக்கத்திலுமாக ஆயுதங்கள் ஏந்திய ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் பாதுகாவலில் ஈடுபட்டிருப்பதைக் கண்டோம். அப்பொழுதுதான் இரவில் எப்படிப்பட்ட பயங்கரமான பாதையில் எங்கள் பயணம் அமைந்திருந்தது என்பதை தெரிந்து கொண்டோம்.

கடைசியாக மலை உச்சியை அடைந்த நாங்கள் ஸ்ரீ நகருக்கு செல்வதற்கான அமைக்கப்பட்டிருந்த சுரங்கப் பாதையை அடைந்தோம். அது ஒரு வழி பாதையாகும். இங்கிருந்து 300 வாகனங்கள் சென்ற பிறகே, மறுபக்கத்திலிருந்து வாகனங்களை இராணுவத்தினர் அனுமதிக்கின்றனர். அந்த சுரங்கப் பாதையானது சுமார் 3550 மீட்டர் நீளமுள்ளதாக இருந்தது. அதின் வழியே பயணிப்பதே ஆச்சர்யமான காரியமாகும். ஸ்ரீ நகரை அடைவதற்கு முன்பாக ஒரு சமவெளிப் பகுதியில் எழுதியிருந்த வாசகத்தை நாங்கள் படித்தோம். அதில் “கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒன்று என்று எழுதியிருந்தது. அந்த வாசகத்தை பார்க்கும்போது, கன்னியாகுமரி மட்டுமல்லாது முழு உலகத்திற்கும் இறைவன் ஒருவரே என்ற செய்தியை மக்களுக்கு பரப்ப சென்ற எங்களுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. இவ்விதமாக ஸ்ரீ நகரை சென்றடைந்தோம்.

ஸ்ரீ நகரில் இந்துக்களின் ஜனத்தொகையை விட முஸ்லிம்களின் ஜனத்தொகை அதிகமாக இருந்தது. அவ்விதமாக இருந்தபோதிலும் நாங்கள் முஸ்லிம்கள் என்ற உணர்வை விட நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வே அதிகமாக இருந்தது. நாங்கள் ஒரே இறைவன் என்ற கொள்கைகளை பரப்பும் வகையில் கைப்பிரதிகள், புத்தகங்கள் மற்றும் சி.டிக்களை கொடுக்கும்போது மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, மேலும் இந்த கொள்கையை பரப்புவதற்கு எங்களுக்கு உதவி செய்தார்கள். மக்களின் தொகையை விட இராணுவத்தினரின் தொகையே அதிகமாக இருப்பதைக் கண்டோம். அவர்கள் இரவும், பகலுமாக தீவிரவாதிகளின் தாக்குதலை சமாளிக்க பனி, குளிர் மற்றும் தங்களுடைய உயிர்களையும் ஒரு பொருட்டாக எண்ணாமல், அவர்களுடைய பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அங்கு எப்போது தீவிரவாத தாக்குதல் தொடங்கும், குண்டுகள் எப்போது வெடிக்கும் என்று சொல்ல முடியாத அளவுக்கு பதட்டமான சூழ்நிலையை நாங்கள் கண்கூடாக கண்டோம். தீவிரவாதிகளால் தாக்குதலுக்குள்ளாகி தரைமட்டமாய் போயிருந்த லால்பஜார் பகுதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டு புதிய பொலிவுடனும், மிகுந்த பாதுகாவலுடனும் இருந்தது. உலக மக்கள் இதை சாதனையாக கருதுவார்கள், நாங்களோ இதை ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் தொண்டாக கருதுகிறோம்.

– தொடரும்….

– D. பத்மநாபன், இறைத்தொண்டர், நெல்லூர்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்