தமிழ் | తెలుగు

» ஆன்மீகச் சுற்றுபயணம் » அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம் – 3

அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம் – 3

சென்ற இதழில் கடந்த வருடம் நாங்கள் சென்ற முதலாவது ஆன்மீக சுற்றுப்பயணத்தின் விவரங்களை முழுமையாகவும், சுருக்கமாகவும் தெரிந்து கொண்டோம். வாசகர்களாகிய நீங்கள் அடுத்த பயணத்தைக் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள ஆவலுடன் இருப்பதை நீங்கள் எழுதிய கடிதங்கள் மூலமாக தெரிந்துகொண்டோம். எல்லா எழுத்தாளர்களையும் போல இயற்கையையும் மற்றும் நாங்கள் கண்ட காட்சிகளை வர்ணித்து கூறாததற்கு காரணம் இது ஒரு ஆன்மீக இதழாகவும், எல்லாவற்றையும் படைத்த அந்த ஒரே இறைவனின் தொண்டாகவும் இருப்பதால் அவருடன் இணைத்து எதையும் வர்ணிக்க முடியாது. உதாரணமாக ஒரு கதையைப் பார்ப்போம். ஒரு ஊரில் மூன்று பக்தர்கள் இருந்தார்கள். அவர்களுக்குள் ஒரு சிறு வாக்குவாதம் வந்தது. அதில் ஒருவன் மது மிகவும் அருமையானது என்றான். மற்றொருவனோ, மதுவை விட மாதுவே அழகானது என்றான். அந்த மூன்றாம் பக்தனோ நீங்கள் இருவரும் சொல்வது சரியல்ல. இவையெல்லாவற்றையும் விட இதை எல்லாவற்றையும் படைத்த இறைவனே அழகானவன், அவருக்கு நிகர் வேறொன்றும் இல்லை என்றான்.

இந்த இரண்டாவது ஆன்மீக சுற்றுப்பயணம் 2015, ஆகஸ்டு 15-ம் தேதி தொடங்கலாம் என முடிவெடுத்தோம். ஆகஸ்டு 15-ம் தேதி என்று சொல்லும்போது அது பாரத நாட்டின் சுதந்திர தின நாளாகும். அதுமட்டுமல்லாமல் மனிதனாக அவதரித்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் உலகப்பிரகாரமாக, தான் செய்து கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்து, முழு நேரமும் இறைவனுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று தன்னையும் தன் குடும்பத்தினரையும் ஒப்புக்கொடுத்த நாளாகும். அந்த நாளான அக்டோபர் 15-ம் நாளை நினைவுகூர்ந்து மனுஜோதி ஆசிரமத்தினர் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதியை விரதநாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த பயணத்தை மேற்கொண்ட நாங்களும் 14-ம் தேதி மாலையில் இருந்து உணவருந்தாமல் 15-ம் தேதி மாலை வரை தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு, எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். இது வடமேற்கு சுற்றுப்பயணமாக இருந்ததால் மனுஜோதி ஆசிரமத்தில் இருந்து 15-ம் தேதி காலை புறப்பட்ட நாங்கள் ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை என்னும் பொதிகை மலை வழியாக பயணத்தைத் தொடர்ந்தோம்.

பொதிகை மலை என்று சொல்லும்போது, அதற்கு புராணங்களில் ஒரு சரித்திர நிகழ்வு உண்டு. சித்தர்களில் ஒருவரான அகத்திய மகா முனிவர் நாராயணர் வாழும் இடத்தை தரிசிப்பதற்காக வடக்கிலிருந்து பொதிகை மலையை நோக்கி பயணித்தார். பொதிகை மலையின் உயரத்தை கண்டு வியந்த அவர், பொதிகை மலையே நீ குனிந்து எனக்கு வழிவிடு எனக் கேட்டார். தான் திரும்பி வந்த பிறகு தன்னுடைய பழைய உயரத்தை நீ பெற்றுக்கொள்ளலாம் என அதற்கு வாக்கு கொடுத்தார். அவருடைய வேண்டுதலுக்கிணங்க பொதிகை மலையும் தன்னைத் தாழ்த்தி, அவருக்கு வழி விட்டதாக புராண குறிப்புகள் கூறுகிறது. நாராயணரின் இருப்பிடத்தை அவர் கண்ட பிறகு இங்கிருந்து அவர் திரும்பி செல்லவில்லை. எனவேதான் பொதிகை மலை உயரம் குறைவாக காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்” என்ற பாடலுக்கேற்ப நாங்களும் தென்றல் காற்றின் தாலாட்டுடன் கேரள மாநிலத்தை அடைய இரவாகி விட்டது. இரவு விரதத்தை முடித்து, உணவருந்தினோம். கேரளா என்று சொல்லும்போது இந்திய சரித்திரத்தில் தமிழர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களில் சேர மன்னர்கள் ஆண்ட பகுதியே இப்போது கேரளம் என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் மாஹி, எர்ணாகுளம், கொச்சின் வழியாக கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கார்வார் என்ற இடத்திற்கு சென்றடைந்தோம். ஒரு பகலும் முழு இரவும் மறு நாள் மதியம் வரை பிரயாணம் செய்த நாங்கள் அதிக கடற்கரைகளைக் கொண்ட அகில உலகத்தின் சுற்றுலா பகுதியான கோவாவை சென்றடைந்தோம்.

கோவாவில் ஒரு நண்பரின் உதவியால் அவருடைய வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து, கோவாவில் எல்லா பகுதிகளுக்கும் சென்று ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு எங்களை சந்தித்த இந்தியாவில் பல மாநிலங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கு அவரவர்களுடைய பாஷையிலும் வெளிநாட்டவர்களுக்கு ஆங்கிலத்தில் கைப்பிரதிகள் புத்தகங்கள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் வாழ்க்கை சரிதை சிடிக்களையும் கொடுத்தோம். அநேகர் எங்களிடம் தமிழ் நாட்டின் கடைக்கோடிப் பகுதியிலிருந்து இவ்வளவு உயரிய கொள்கையை உலகிற்கே எடுத்துச் சொல்கிறீர்களே என்று ஆச்சரியப்பட்டனர்.

அங்கிருந்து நாங்கள் மஹாராஷ்டிர மாநிலமாகிய பாராமதியை அடைந்தோம். அங்கு ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தரின் வீட்டில் தங்கி இருந்து, எல்லா இடங்களுக்கும் சென்று மராத்தி மொழியில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள், சிடிக்களை விநியோகித்துக் கொண்டிருந்தோம். சுவரொட்டிகளை ஓட்டும்போது இதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் எங்களை அணுகி, சுவர்களில் மட்டுமல்ல, இங்கே நின்று கொண்டிருக்கிற சுமார் 100 ஆட்டோக்களிலும் இந்த ஸ்டிக்கரை நீங்கள் ஓட்டுங்கள். எங்கள் ஆட்டோக்கள் செல்லும் எல்லா இடங்களிலுள்ள மக்களும் இதைப் பார்த்து, இறை ஞானத்தை பெறட்டும் என சொல்லி, இவ்விதமாகவாவது ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கு நாங்கள் தொண்டு செய்ய எங்களுக்கு வாய்ப்பளியுங்கள் என கேட்டனர்.

இவ்விதமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் குறிப்பிட்ட ஒருவர் இரு சக்கர வாகனத்தில் எங்களை பின்தொடர்ந்தார். அவர் யாராக இருக்கும் என யோசிக்கும்போது அவர் நேராக என்னிடம் வந்து ஹிந்தி மொழியில் என்னை மறந்து விட்டீர்களா சகோதரனே என என்னிடம் பேச ஆரம்பித்தார். அப்போது அவர் என்னிடம்: பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் இரண்டாவது புதல்வரான தேவாசீர் லாறி பாராமதிக்கு வருகை தந்திருந்தபோது நான் உங்களை சந்தித்திருக்கிறேன். தேவாசீர் லாறி அவர்களின் பேட்டியையும் பத்திரிக்கையில் வெளியிட்டேனே, நான்தான் அந்த சந்தோஷ் காம்ளே என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பத்திரிக்கை நண்பர் என்னை அடையாளம் கண்டுகொண்டதோடு அல்லாமல் இன்னும் பிரகாஷ்ரத்னபாரத், தொலைக்காட்சி நிருபரான சலீம் சையத் மற்றும் அநேக பத்திரிக்கையாளர்களையும், நண்பர்களையும் அழைத்து, ஸ்ரீமந் நாராயணரின் கொள்கையை அவர்களுக்கு அவரே விளக்கிக் கூறி, இனிமேல் மராத்தி மொழியில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவைக் குறித்த காரியங்களை எழுத வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பல மதத்தைச் சார்ந்த பத்திரிக்கை நண்பர்களும் அவருடைய கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வு இந்த பயணத்தின்போது என் நினைவை விட்டு இன்றும் அகலாத நிகழ்வாகும்.

அவருடைய நண்பர்களில் சிலர் இப்பிரயாணத்தை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்த தேவாசீர் லாறியின் இரண்டாவது மகனான லியோ பால் C. லாறியை சந்தித்தனர். அகில இந்திய சுற்றுப் பிரயாணத்தின் நோக்கத்தையும் இச்சமயத்தில் இந்திய மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றும் கேட்டு தெரிந்து கொண்டனர். அது மட்டுமல்லாது, நாங்கள் அனைவரும் ஆசிரமத்திற்கு வந்து, ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஆசியைப் பெற்றுக்கொண்டு, ஆசிரமத்தில் நாங்கள் காணும் காட்சியையும், அங்கு நடைபெறும் விழாக்களைக் குறித்தும், ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் இந்த மகத்தான கொள்கைகளையும், மராத்தி மொழியில் எல்லா பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியிலும் வெளியிடுவோம் என்று கூறினார்கள். கடந்த வருடம் அவர் எங்களிடம் சொன்னது போலவே இந்த வருடம் மனுஜோதி ஆசிரமத்திற்கு வருகை தந்து, கல்கி ஜெயந்தி விழாவில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் கலந்து கொண்டார்.

பயணத்தை தொடர்ந்த நாங்கள் பூனேவில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தரை சந்தித்து விட்டு, இரவு உணவை முடித்துக்கொண்டு காலையில் மும்பை நகரத்தை சென்றடைந்தோம். மும்பையில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர் ஒருவரின் வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்தோம். மும்பை நகரத்தில் பல பகுதிகளுக்கும் சென்று ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை அடங்கிய கைப்பிரதிகளையும், புத்தகங்களையும் இந்தி மொழியில் சந்தித்த அநேக நண்பர்களுக்கு கொடுத்தோம். விசேஷமாக தமிழர்கள் அதிகமாக வாழும் தாராவி பகுதிகளுக்குச் சென்று தமிழ் மொழியில் கைப்பிரதிகள் மற்றும் புத்தகங்களைக் கொடுத்தோம். அந்த பகுதியிலுள்ள நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

சனிக்கிழமை ஓய்வு நாளன்று மும்பை நகரிலுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் செய்திகளை விவரித்தோம். திரு. D. லியோ பால் C. லாறி அவர்கள் விவிலியத்திலிருந்து வானங்களே, வானத்தின் மேலுள்ள தண்ணீர்களே அவரைத் துதியுங்கள்” என்ற வசனத்தின் விளக்கத்தை விவரித்துக் கூறினார். அப்போதுதான் உடன் சென்ற எங்களுக்கும் அதன் உண்மையான அர்த்தம் புரிந்தது. வானங்களின் மேலுள்ள தண்ணீர்கள் எப்படி இறைவனை துதிக்கும் என்ற கேள்வியைக் கேட்டு, கடவுளுடைய பிள்ளைகள் கடவுளுடைய பணியைச் செய்வதற்காக அவர்கள் புறப்பட்டுச் செல்லும் எல்லா இடங்களிலும் இலேசான பூமழை தூவும். அவ்விதமாக வரும் மழையானது மேகங்களால் ஏற்படும் மழையல்ல. வானங்களின் மேலுள்ள தண்ணீர்கள் இறைவனைத் துதிப்பதற்காக பொழிவதாகும். அது இறைவனுக்கு தன்னுடைய மகிழ்ச்சியை அவ்விதமாக தெரிவித்துக் கொள்கிறது என்று விளக்கமளித்தார். அழிவுகள் ஒரு பக்கம் நேர்ந்தாலும் மற்றொரு வகையில் அவருடைய அருளையும் இந்த பயணத்தின் போது நாங்கள் பெற்றோம்.

மும்பை நகரம் என்று பெரிய அளவில் பேசப்பட்டாலும், அங்குள்ள மக்களுக்கு ஓய்வு என்பதே இல்லாமல் இரவும் பகலும் ஒரு இயந்திர மனிதனைப்போல சுற்றித் திரிவதை நாங்கள் பார்த்தோம். வேலை, பணம் மற்றும் பொன் இவற்றை சம்பாதிக்கவே இவ்விதமாக பாடுபடுகிறார்கள். உண்மையிலேயே சொல்லப்போனால் இறைவனால் மனிதனுக்கு அருளப்படும் பேரின்பம் என்ன என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க நேரம் இல்லாதவர்களாய் அலைந்து திரிகிறார்கள். அவர்கள் அலைந்து திரிவதெல்லாம் சிற்றின்ப காரியங்களுக்காக என்று புரியும்போது நகரவாழ் மக்களைக் குறித்து மிகவும் வருந்தினோம். ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் கூட தம்முடைய செய்திகளில் நகரத்தை விட்டுவிட்டு கிராமங்களுக்கு சென்று வாழுங்கள் அப்போதுதான் உங்களால் இறை அன்பையும், மன சாந்தியையும் பெற்று சந்தோஷமாக வாழ முடியும் என்று கூறியுள்ளார்.

மும்பை பட்டணத்திலிருந்து நாங்கள் இரண்டு குழுவாக பிரிந்து குஜராத் மாநிலத்திற்கு ஒரு குழுவினர் காரிலும், மற்றொரு குழுவினர் ரயிலிலும் பயணித்தோம். மறுநாள் காலையில் செய்தித்தாள்களை வாங்கி வாசித்தபோது மும்பையின் பங்கு சந்தை பலமான வீழ்ச்சியடைந்திருந்தது. அதின் விளைவாக அநேக கம்பெனிகள் திவாலாகி இழுத்து மூடப்பட்டன. அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் அக்ரி கோல்ட் நிறுவனம் திவாலானது. அதில் முதலீடு செய்திருந்த அநேக குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டனர். ஒரே நேரத்தில் இவ்விதமாக நிகழ்ந்தது எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மற்றொரு வியப்பான காரியம் எங்களுக்காக காத்திருந்தது.

அகத்திய முனிவரும் தெச்சணமே!

சில அருந்தவ முனிவர்களும் தெச்சணமே!

கூடிப் பூசிப்பர் தொழுவர் தெச்சணமே!

ஒன்று கூட்டி ஆளும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணரும் தெச்சணமே!

தொடரும்….

D. பத்மநாபன், இறைத்தொண்டர், நெல்லூர்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்