தமிழ் | తెలుగు

» ஆன்மீகச் சுற்றுபயணம் » அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம்

அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம்

சென்ற இதழில் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு சுற்றுப் பயணங்களைக் குறித்த பொதுவான சில காரியங்களை வெளியிட்டிருந்தோம். இந்த இதழில் முதலாவது இந்திய சுற்றுப்பயணம் எவ்விதமாக ஆரம்பிக்கப்பட்டது என்று பார்க்கலாம்.

முதலாவது சுற்றுப் பயணத்தை ஏப்ரல் மாதத்தில் தொடங்கலாம் என முடிவெடுக்க சில காரணங்கள் உண்டு. ஏப்ரல் மாதம் என்று சொல்லும்போது ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் 21 நாட்கள் விரதமிருந்தார்கள், அந்த சமயத்தில் அவர் 26 குறிப்புகளை எழுதி வைத்து அதற்காக ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்தார்கள் என்பது அவருடைய பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்ததே. அதில் அகில இந்திய மக்களுக்கும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற குறிப்பையும் எழுதி, தம்முடைய பக்தர்களையும் அனுதின பிரார்த்தனைகளில் நினைவுகூர்ந்து பிரார்த்திக்கும்படி செய்திருந்தார்கள். எனவே இந்த சுற்றுப் பயணத்தை ஏப்ரல் மாதம் 12-ம் தேதியன்று, மனுஜோதி ஆசிரமத்திலிருந்து வட கிழக்கு இந்திய சுற்றுப் பயணத்தை, நாங்கள் செல்லும் வழியிலுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களைத் தரிசித்து விட்டு செல்வதாக அவர்களுக்கு தகவல் தெரிவித்தோம். அந்த பயணத்தின்போது ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னம் எங்களோடு இருந்ததை வெளிப்படுத்தும் விதமாக மழையும், மின்னலும் தொடர்ந்து வந்ததை நாங்கள் பார்த்தோம்.

இந்த மகிமையின் பிரசன்னம் எங்களுக்கு மட்டுமல்லாது நாங்கள் தகவல் தெரிவித்த அந்தந்த இடங்களிலும் மழையும், மின்னலுமான பிரசன்னத்தை அங்குள்ள பக்தர்களும் குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டிணம் போன்ற இடங்களில் இருந்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் அனைவரும் தாங்கள் கண்டதை தொலைபேசியின் வாயிலாக எங்களுக்கு தெரிவித்து மகிழ்ந்தனர். இந்த மழையானது நாங்கள் பக்தர்களை சந்தித்த இரண்டு மூன்று மணி நேரம் இடைவெளி விட்டு பெய்தது. மேலும் அவர்களை சந்திக்க எங்களுக்கு எந்தவிதமான இடையூறுமில்லாமலும் இருந்ததை நாங்கள் கண்டு, ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளை எண்ணி வியப்படைந்தோம். குறிப்பாக நெல்லூர் மாவட்டத்தில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள், தாமே கூட்டங்களை ஒழுங்குபடுத்தி ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு குருதீட்சை கொடுத்த இடமாகும். விஜயவாடாவிலும் அநேகமுறை கூட்டங்களை நடத்திய நிகழ்வுகளும் உண்டு. விசாகப்பட்டிணத்திலும் பலமுறை கூட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்.

இவ்விதமாக ஆந்திர மாநிலத்தை முடித்து, ஒரிசா மாநிலத்தின் ஆரம்ப எல்லையாகிய பரம்பூரில் அடியெடுத்து வைத்தோம். அப்போது தமிழ் நாடு ஆந்திரா மார்க்கமாக சென்ற எங்களுக்கு ஒரிசாவின் வறட்சி, ஏழ்மை, அவர்களின் எளிய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களையும் கண்டு உள்ளம் நெகிழ்ந்தோம். இந்நாட்களில் ஒரிசா என்று அழைக்கப்படும் மாநிலமானது சரித்திரத்தில் கலிங்க நாடு என்று அழைக்கப்பட்டது. பேரரசர் அசோகர்கூட தன் வாழ்நாளில் நடத்திய ஒரே போர் அந்த கலிங்கப் போர் ஆகும். கலிங்கப் போருக்குப் பிறகு ஹிம்சையை விட்டுவிட்டு அஹிம்சையைக் கடைபிடிக்க வேண்டும் என்று புத்த மதத்தை தழுவிய இடமாகும். ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களும் தன்னுடைய செய்திக் குறிப்புகளில் நீங்கள் அஹிம்சையை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய காரியங்களை நினைவுகூர்ந்தோம்.

மேலும் குர்தாரோட், இந்தியாவில் புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவில், கோனார்க், புவனேஸ்வர், கட்டக், பாலாசூர் வழியாக, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஒரியா கைப்பிரதியை விநியோகம் செய்து கொண்டு, செல்லும் வழியில் அநேகமான பிரமுகர்களையும் சந்தித்து அவர்களுக்கு புத்தகங்களையும், சி.டிக்களையும் கொடுத்துக் கொண்டு ஒரிசாவைக் கடந்து மேற்கு வங்காளத்திலுள்ள கரக்பூரை அடைந்தோம். மறுநாள் காலையில் பிரயாணத்தைத் தொடர்ந்து மேற்கு வங்காளப் பகுதிகளான கொல்கத்தா, மிதினாபூர், அசன்சால், மால்தா, நியு ஜல்பாய்குரி  போன்ற பகுதிகளிலும் வங்காள மொழியில் கல்கி மகா அவதாரம், கைப்பிரதிகள், சி.டிக்களை அனைவருக்கும் இலவசமாக விநியோகம் செய்தோம்.

மேற்கு வங்காளம் என்பது, இந்தியாவின் தேசீய கீதத்தை எழுதிய இரவீந்திரநாத் தாகூரும், வந்தே மாதரத்தை எழுதியவரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இரவீந்திரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலி புத்தகத்தை விவரித்து ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் இந்த மனுஜோதி ஆசிரமத்தில் விளக்கிக் கூறி அதற்கு முதலாம் இடிமுழக்கச் செய்தி என்று புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். இதன்படி உலகமெங்கிலுமுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் அனைவரும் இந்திய தேசீய கீதத்தை பிரார்த்தனையின் தொடக்கமாக பாடுவதை இன்று வரை வழக்கமாக செய்து வருகிறார்கள்.

மால்தாவைக் கடந்து நியு ஜல்பாய்குரிக்கு செல்லும் வழியில் பயங்கரமான புயல் காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்தது. அதன் விளைவாக மரங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் சரிந்து சாலையில் தொடர்ந்து பிரயாணம் செய்ய முடியாதபடி சூழ்நிலை ஏற்பட்டபோதும் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளால் எங்களுக்கும், நாங்கள் சென்ற வாகனத்திற்கும் எந்தவிதமான சேதாரமுமில்லாமல் நியு ஜல்பாய்குரியை சென்றடைந்தோம். “ஒன்றும் உங்களை எந்த விதத்திலும் சேதப்படுத்தாது” என்ற ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பொன்னான வாக்குறுதியை நினைவுகூர்ந்து பிரார்த்தித்துக் கொண்டும், பாடல்களை பாடிக்கொண்டும் எங்கள் பிரயாணத்தை முன்னோக்கித் தொடர்ந்தோம்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஜ் பீகார், அஸ்ஸாம் மாநிலத்தில் அல்லிபூருதூவார், நியு பொங்கைகாம், ரங்கீயா வழியாக அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரான டிஸ்பூர் (கௌஹாத்தி) சென்றடைந்தோம். அங்கிருந்து ஜாகிரோட் வழியாக தின்சூக்கியாவுக்குச் சென்றடைந்தோம். மறுநாள் காலையில் (ஏப்ரல் 25-ம் தேதி சனிக்கிழமை) தின்சூக்கியாவில் கைப்பிரதிகள், புத்தகங்கள் அனைத்தையும் விநியோகித்துக்கொண்டு திம்மாப்பூர் செல்லும் வழியில் பூகம்பம் ஏற்பட்டதைப்போல் ஒரு உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. இருந்தாலும் பிரயாணத்தை நிறுத்தாமல் தொடர்ந்து பிரயாணம் செய்து கொண்டிருந்த நேரத்தில் தொலைபேசி வழியாக அநேக பக்தர்கள் எங்களிடம் தொடர்பு கொண்டு நேபாளம், காட்மண்டு மற்றும் பீகார், டெல்லி, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒரிசா, விசாகப்பட்டிணம், நெல்லூர் வரை இந்த பூகம்ப அதிர்வை உணர்ந்தனர் என்று தெரிவித்தனர்.

நேபாளத்தில் (காட்மண்டு) பூகம்பத்தால் பெரிய அழிவுகள் ஏற்பட்டதை நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்தபோது மிகவும் வருந்தினோம். ஓராண்டுக்கு முன்னதாக நாங்கள் குழுவாக நேபாளத்திற்கு சென்று கைப்பிரதிகள், பகவத் கீதை மற்றும் ஆதிபலி பிரமாணம் என்ற புத்தகங்கள் விநியோகம் செய்த நினைவுகள் எங்களுக்கு வந்தது. அங்கு எங்களுடன் பழகிய நண்பர்களுக்கும், நாங்கள் தங்கியிருந்த விடுதியினருக்கும் தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொள்ள முயற்சித்தபோது எந்தவிதமான தொடர்பும் கிடைக்கவில்லை. எனவே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் அவர்களுக்காகவும், நேபாளத்தில் வசிக்கும் மக்களுக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டோம். இந்த நிகழ்ச்சி இன்று வரையிலும் எங்கள் நினைவில் இருந்து இன்னும் அகலவில்லை. மீண்டும் ஒருமுறை அவர்களை சந்திக்க வாய்ப்பளிப்பதற்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டோம்.

இந்த பயங்கரமான அழிவு நடைபெற்ற நேரத்திலும் நாங்கள் எங்கள் பிரயாணத்தைத் தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருந்தோம். எங்கள் அனைவருடைய மனதிலும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருள் எங்களைக் கைவிடவில்லை என்ற நம்பிக்கையோடும், அகில உலகத்திலுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களுடைய பிரார்த்தனைகள் மற்றும் வேண்டுதல்களும் எங்கள் பிராயாணத்திற்கு தேவையான பாதுகாவலைத் தந்தது. நாகாலாந்து மாநிலத்தைக் கடந்து மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கிற்கு சென்று அங்கிருந்து கௌஹாத்தியை வந்தடைந்தோம்.

கௌஹாத்தியிலுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களை ஒன்று திரட்டி அவர்களுக்காக ஆன்மீக கூட்டத்தை ஏற்பாடு செய்து, அந்த நேரத்தில் நடைபெற்ற அழிவுகளைக் குறித்து ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் செய்திக் குறிப்புகளை எடுத்து அங்குள்ள பக்தர்களுக்கு விவரிக்கப்பட்டது. மேலும் அவர்கள் இறைவனுக்கு பிரியமானவர்களாக எவ்விதமாக வாழ வேண்டும் என்றும் எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டது. மேலும் இமய மலை தண்ணீருக்குள் செல்லும் என்பதையும், சென்னை பட்டணம், அமரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் போன்ற நகரங்கள் தண்ணீரில் முழ்கும் என்றும், தீவுகள் காணாமல் போகும் என்றும், உலகத்தின் வரைபடமே மாறி விடும் என்ற ஸ்ரீ லஹரி கிருஷ்ணா 1974-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட செய்திக் குறிப்புகளை எடுத்து விவரித்து, அதைப் படித்து தியானிக்கும்படி பக்தர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து நியு ஜல்பாய்குரி வந்தடைந்தோம். நியு ஜல்பாய்குரி என்பது நேபாளத்தின் எல்லைப் பகுதியாக இருக்கிறது. மேலும் சீக்கீம் சீனாவின் எல்லைப் பகுதியாக இருக்கின்ற காரணத்தினால் நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டதினாலும் அதிக பாதுகாவல் மற்றும் சோதனைச் சாவடிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. நாங்களோ ஸ்ரீமந் நாராயணரை பஜனை செய்து கொண்டு பாதுகாவலில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்களுடன் செய்திகளைப் பகிர்ந்து கொண்டு ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் புத்தகங்கள் மற்றும் கைப்பிரதிகள் சி.டிக்களைக் கொடுத்து அவர்களின் உதவியுடன் கபளிம்பாங், சிம்டாங், சீக்கீம் மாநிலத்தின் தலைநகரான கேங்டாக் சென்றடைந்தோம். கேங்டாக்கிலிருக்கும்போது அங்கு ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவினால் இரண்டு நாட்கள் அங்கே தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவ்விதமாக தங்கியதன் காரணமாக அங்குள்ள அநேகமான பகுதிகளையும், பிரமுகர்களையும் சந்தித்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற செய்தியை அவர்களுக்கு அறிவித்து, அவர்களுக்கு சி.டிக்களையும், புத்தகங்களையும் கொடுக்க வாய்ப்பு கிடைத்தது.

இராணுவ வீரர்கள் அநேகர் நாட்டின் எல்லைப் பகுதிகளில் இரவும் பகலும் ஓய்வின்றி பாதுகாவலில் இருப்பது மட்டுமல்லாமல், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு உதவி புரிவதை நாங்கள் பார்க்கும்போது ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் வாழ்த்துதல்களை தெரிவித்தோம். இந்தியாவின் பாதுகாவலுக்காக மனுஜோதி ஆசிரமத்திலும், அகில உலக தியான நிலையங்களிலும் இரவும், பகலும் தம்முடைய பக்தர்களை இன்று வரை விழிப்புடன் பிரார்த்தனை செய்யக் கோரி, ஆன்மீக இராணுவ வீரர்களாக எங்களை செயல்பட செய்திருப்பதை நினைத்து பெரு மகிழ்ச்சி அடைந்தோம். “யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் யாவும் பெற” நீங்களும் எங்களுடன் இணைந்து அனுதினமும் மறவாமல் இறைவனை துதிப்பீர்களாக!

யாதும் ஊரே யாவரும் கேளீர்! கேட்பவர்க்கெல்லாம் கிடைத்திடும் இறைவனருள்!

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை உலகமெங்கும் பரவட்டும்!

– தொடரும்…..

– D. பத்மநாபன் – இறைத் தொண்டர், நெல்லூர்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்